போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணி: அமைச்சர் வேலுமணி
வட கிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையில் நவ.3-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சென்னையில் இரவு முழுக்கவும் பல இடங்களில் மழை பெய்தது. எனினும் மழைநீர் தற்போது வடிந்துவிட்டது
வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக மழையால் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 30.10.2017 -ல் 257 மரங்களும், 2.11.17 -ல் 152 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிரட், உணவு உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. சுமார் 355 நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. மழை நிவாரணப் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.