கேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக, கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். இந்த நிலையில் அவர் மீதும், பதவி நீக்கம் செய்யப்பட்ட 13 மந்திரிகள் மீதும் தேசத்துரோகம், கிளர்ச்சி, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தன்மீதான வழக்குகள் மற்றும் விசாரணை நேர்மையாக நடைபெறும் என வாக்குறுதி வழங்கினால் மட்டுமே தான் ஸ்பெயின் திரும்ப முடியும் என கார்லஸ் தெரிவித்திருந்தார். அதோடு அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவரோடு நான்கு மந்திரிகளும் பெல்ஜியத்திலேயே இன்னும் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்டை ஸ்பெயின் நீதிபதி பிறப்பித்துள்ளார். நேற்று, இதே ஸ்பெயின் நீதிபதிதான், கார்லஸ் பூஜ்டிமோன் கூட்டாளிகள் ஒன்பது பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.