Breaking News
அமெரிக்காவில் பயங்கரம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; 26 பேர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், வில்சன் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம், சுதர்லேண்ட் ஸ்பிரிங்க்ஸ். அங்குள்ள பர்ஸ்ட் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த தேவாலய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்தார்.
அவர் முதலில் தேவாலயத்துக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டார். அதையடுத்து தேவாலயத்துக்குள் நுழைந்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். அந்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். ஆனாலும் அந்த நபர், துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நடத்தி பலரையும் ரத்த வெள்ளத்தில் சரிய வைத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
26 பேர் பலி
இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 5 முதல் 72 வயதினர் வரையிலானவர்கள். பலியானவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியார் பிராங்க் போமிராயின் 14 வயது மகள் அன்னாபெல்லியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் 23 பேர் தேவாலயத்துக்கு உள்ளேயும், 2 பேர் தேவாலயத்துக்கு வெளியேயும் இறந்து கிடந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவரும் சாவு
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்ப முயன்ற அந்த இளைஞரிடம் இருந்த துப்பாக்கியை உள்ளூர்வாசி ஒருவர் பறித்தார். அதைக் கொண்டு அவர் மீது சுடத்தொடங்கினார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த உள்ளூர்வாசியும் அவரை விடாமல், துரத்தினார். அவரோ வாகனத்தில் ஏறி தப்பினார். அந்த வாகனம், அங்கு குவாடலுப் கவுண்டி செல்லும் வழியில் மோதி நின்றது.
தேவாலயத்தில் அந்த இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்தி பலரையும் ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு, தப்பியதையும், அவரை உள்ளூர்வாசி ஒருவர் தொடர்ந்து கொண்டிருப்பதையும் அறிந்து போலீஸ் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் வாகனத்தை சென்று பார்த்தபோது, அதில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தாரா அல்லது அவரை துரத்திச் சென்ற உள்ளூர்வாசிதான் அவரை சுட்டுக்கொன்றாரா என்பது தெரியவரவில்லை. அந்த காரில் ஏராளமான ஆயுதங்கள் கிடந்ததைக் கண்டு போலீசார், அவற்றை கைப்பற்றினர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்?
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் டெவின் பேட்ரிக் கெல்லி (வயது 26), அமெரிக்க விமானப்படையில் பணியாற்றி 2014-ம் ஆண்டு தனது மனைவி, குழந்தையை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியதின் நோக்கம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.
டெக்சாஸ் பொது பாதுகாப்பு பிராந்திய இயக்குனர் பிரிமேன் மார்ட்டின் கூறும்போது, “துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தார், மார்பில் குண்டு துளைக்காத உடையும் அணிந்திருந்தார். தேவாலயத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அதைத் தொடர்ந்துதான் தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்” என்று குறிப்பிட்டார்.
டெக்சாஸ் மாகாண வரலாற்றில் நடந்துள்ள மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுதான் என அந்த மாகாண கவர்னர் கிரேக் அப்போட் தெரிவித்தார்.
டிரம்ப் கண்டனம்
ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், “துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், மிக மோசமானவர்” என கூறி உள்ள டிரம்ப், “இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு துப்பாக்கியை குறை கூற முடியாது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “நமது நாட்டில் (அமெரிக்காவில்) நிறைய மன நல பிரச்சினைகள் உள்ளன” என்றும் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில், அக்டோபர் 1-ந் தேதி இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 59 பேர் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்கு முன்பாக, டெக்சாஸ் மாகாண தேவாலயத்தில் நடந்துள்ள இந்த துப்பாக்கிச்சூடு மக்களை உலுக்கி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.