Breaking News
கருணாநிதியை சந்திக்க “அரசியல் நோக்கத்தோடு மோடி வரவில்லை” மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அரிசி, உணவுப் பொருட்கள், பால், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
அரசியல் பேசவில்லை
கேள்வி:- அமைச்சர்கள் கொளத்தூர் தொகுதிக்கு வந்தபோது, ‘எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிட்டிருந்தால், பாதிப்பு ஏற்பட்டு இருக்காது’ என்று கூறியுள்ளனரே?
பதில்:- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்த பிறகும், அதற்கான பணிகளில் உள்ளாட்சித்துறையும், மாநகராட்சியும் ஏன் ஈடுபடவில்லை? என்பதற்கு அவர்கள் முதலில் பதில் அளிக்க வேண்டும்.
கேள்வி:- பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தது அரசியல் காரணமா? அல்லது மரியாதை நிமித்தமாகவா?
பதில்:- திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்றமுறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, கோபாலபுரம் வந்து, பார்த்து விட்டு சென்றிருக்கிறார். தவிர, அரசியல் நோக்கத்தோடு அவர் வரவில்லை. அரசியல் பற்றியும் பேசவில்லை.
பொய் பிரசாரம்
கேள்வி:- சென்னையில் மழை பெய்யும்போது நீங்கள் வெளியூர் பயணம் செல்வதாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கருப்பண்ணன் ஆகியோர் கூறியுள்ளார்களே?
பதில்:- ஷார்ஜாவுக்கு நான் பொழுதுபோக்குக்காக செல்லவில்லை. அங்கு நடந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்பதற்காக அந்த அரசுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்ததன் படி, சென்றுவிட்டு வந்தேன். பொழுதுபோக்கு, உல்லாசத்துக்காக செல்லவில்லை.
கேள்வி:- ‘நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’, என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளாரே?
பதில்:- உண்மைகளை மூடி மறைத்து விட்டு, உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, தீர்ப்பு வந்ததும் தேர்தல் நடத்துவோம் என்பது சுத்த ‘ஹம்பக்’. பல பொய்யான செய்திகளை சொல்லி எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் ‘குதிரை பேர’ ஆட்சி போலவே, இதுவும் ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தவறான பொய் பிரசாரம்.
மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.