டில்லியில் கடும் பனிமூட்டம்: 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்
டில்லியில் காற்று மாசு பாட்டுடன் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு நவம்பர் 12 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடர் பனிமூட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்களும், வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஆக்ரா – நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரே இடத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகின.
முதலில் வந்த கார் ஒன்று சாலையின் தடுப்பு மீது மோதி விபத்திற்குள்ளாகி நின்றுள்ளது. பனிமூட்டத்தால் இதனை கவனிக்கால் வந்த அடுத்தடுத்த வாகனங்களும் மோதி விபத்திற்குள்ளாகின. டிரைவர்களை மெதுவாக வரும்படி, அங்கிருந்தவர்கள் சத்தமிட்டும், அதனை கவனிக்காமல் வேகமாக வந்து வாகனங்கள் மோதி உள்ளன.
கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகும் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக டில்லிக்கு வரும் 30 ரயில்கள் மற்றும் 30 விமானங்கள் தாமதமாக வந்தடைகின்றன.