மோடி சந்திப்பில் அரசியல் இல்லை மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் விளக்கம்
மதுரை:”தி.மு.க., தலைவர்,கருணாநிதி – பிரதமர் மோடி சந்திப்பை, அரசியலுக்காக எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இல்லை,” என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் நேற்று நடந்த, கறுப்பு தின ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, ஸ்டாலின் பேசியதாவது:
பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பின்பும், அதன் பாதிப்பு மக்களிடம் உள்ளது. மத்திய அரசின், அந்த நள்ளிரவு அறிவிப்பால், மக்கள் சுதந்திரம் இழந்தனர். திட்டமிடாத இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகளுக்கு, பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில், பா.ஜ., விற்கு உள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பால், நாடு முழுவதும் சிறு தொழில்கள் நசிந்து விட்டன.
கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்த பின், பா.ஜ.,விற்கு எதிரான போராட்டத்தை, தி.மு.க., நிறுத்தி விட்டது என, சிலர் வதந்தி பரப்பினர். மழை பாதிப்பு மாவட்டங்களில் மட்டும், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கும், மோடி வருகைக்கும் சிலர் முடிச்சு போட்டு, அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் முயற்சி பலிக்காது. மோடி சந்திப்பை, அரசியலுக்காக, தி.மு.க., ஒருபோதும் பயன்படுத்தாது.இவ்வாறு அவர் பேசினார்.
‘கொச்சைப்படுத்த வேண்டாம்’
கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி கூறுகையில், ”2ஜி வழக்கு தீர்ப்பு நெருங்கும் போது, பிரதமர் மோடி, தி.மு.க., தலைவர், கருணாநிதியை சந்தித்துள்ளார் என, கேட்கின்றனர். இந்த சந்திப்பை
கொச்சைப்படுத்த வேண்டாம். மூத்த தலைவர் என்ற அடிப்படையில், கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்,” என்றார்.
தஞ்சை பாலத்தில் ஆய்வு:
தஞ்சையில், 52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம், திறப்பு விழாவுக்கு முன், விரிசல் கண்டது. இதை, ஸ்டாலின், நேற்று மதியம் பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது:இந்த பாலம், 52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, 29ம் தேதி திறக்கப்பட இருந்தது. அதற்குள் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாலம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தினரா, எல்லாவற்றிலும் கமிஷன் பெறுவது போல், இந்த பாலம் கட்டுவ திலும் கமிஷன் அடித்துள்ளனரா என, சந்தேகம் எழுகிறது.
இந்த பாலத்தில் நடந்துள்ள முறை கேடு குறித்து விசாரணை செய்ய, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இல்லை எனில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுப்பணி துறையை கைவசம் வைத்துள்ள முதல்வர் பதில் சொல்ல நேரிடும்.