Breaking News
அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம், வர்த்தகம் என்று சொல்லப்பட்டாலும், தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிற வடகொரியாவை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆசிய தலைவர்களுடன் ஆலோசிப்பதும், வடகொரியாவுக்கு எதிராக அவர்களை ஒன்றுதிரட்டுவதும்தான் டிரம்பின் உண்மையான நோக்கமாக அமைந்துள்ளது.
அந்த வகையில்தான் அவர், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜப்பான், தென்கொரியா பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் நேற்று முன்தினம் சீன தலைநகர் பீஜிங் போய்ச் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போர்பிட்டன் சிட்டி என்று அழைக்கப்படுகிற பீஜிங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் டிரம்புக்கு 21 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஜின்பிங்-டிரம்ப் சந்திப்பு
அதைத் தொடர்ந்து சீன பாராளுமன்ற அரங்கில் ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் நேற்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஜின்பிங்கிடம் டிரம்ப், “எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்புக்கு நன்றி. பல ஆண்டுகளாக வெற்றி மற்றும் நட்பை எதிர்நோக்கி உள்ளேன். நாம் இணைந்து செயல்படுகிறபோது நமது பிரச்சினைகளை மட்டுமல்ல, உலக பிரச்சினைகளையும், மாபெரும் ஆபத்து பிரச்சினைகளையும், பாதுகாப்பு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
வடகொரியா விவகாரம்
தொடர்ந்து பேசுகையில் டிரம்ப் கூறியதாவது:-
உங்கள் அழகான மனைவியுடனும், மெலனியாவுடனும் ஒவ்வொரு நிமிடத்தையும் இனிதாக கழித்தோம். அவர்களின் உறவு ஆழமானது. நமது உறவு மிகப்பெரியது என்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளது.
எனது பிரதிநிதிகள் மற்றும் உங்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், வடகொரியா விவகாரம் குறித்து விவாதித்து நாம் நடத்திய சந்திப்பு, மிக சிறப்பானது. அந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்.
இந்தப் பிரச்சினையில் மற்றவர்களை நாம் இணைத்து துரிதமாக, திறம்பட செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வர்த்தக ஒப்பந்தம்
டிரம்ப், ஜின்பிங் சந்திப்பின்போது, அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையே 250 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.16¼ லட்சம் கோடி) வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் கம்ப்யூட்டர்களுக்கான சிப் செட்டுகள், 300 ஜெட் விமானங்கள், சோயாபீன்ஸ் ஆகியவற்றை அமெரிக்காவில் இருந்து சீனா இறக்குமதி செய்வதும் அடங்கும். ஷேல் வாயு தொடங்கி கார் உதிரிபாகங்கள் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
முன்பு அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்ட ‘பிரை’ என்னும் பெல்ட் மற்றும் சாலை முன் முயற்சி திட்டத்தையும், இப்போது அந்த நாடு ஏற்குமாறு சீனா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.