நீதிபதிகளின் பெயரால் லஞ்சம் வாங்கப்பட்டதா?
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மீது லஞ்சப்புகார் கூறி வக்கீல்கள் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த வக்கீலுமான துஷ்யந்த் தவே, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அமர்வின் முன் நேற்று ஆஜரானார். அவர், நீதிபதிகளின் பெயரால் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, இது தொடர்பாக அவசரமாக விசாரணை நடத்த வேண்டும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.
அதைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.
மருத்துவ கல்லூரி விவகாரம்
மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்தூசி மற்றும் பி.பி.யாதவ், பாலாஷ் யாதவ், விஸ்வநாத் அகர்வாலா, பாவனா பாண்டே, சுதிர் கிரி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வழக்கு பதிவு செய்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கு, உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் செயல்பட்டு வந்த பிரசாத் மருத்துவ கல்லூரி தொடர்பானது. அந்த கல்லூரியின் உள்கட்டமைப்பில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அரசு மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டது. அரசு பரிசீலித்து, 2017-18, 2018-19 கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தது. ஆனால் பிரசாத் கல்வி அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் பெயர்
அதைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி தரப்பில் இருந்து ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி குத்தூசியையும், பாவனா பாண்டே என்பவரையும் மீரட் வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரியின் சுதிர் கிரி மூலமாக பி.பி. யாதவ் தொடர்பு கொண்டார். தனக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் இந்த விவகாரத்தில் தீர்வு கண்டு தருவதாக முன்னாள் நீதிபதி குத்தூசி வாக்குறுதி வழங்கினார்.
இதில் லஞ்ச பரிமாற்றத்துக்கு தரகராக விஸ்வநாத் அகர்வாலா அமர்த்தப்பட்டுள்ளார். இதில் பெரும் தொகையும் கைமாறி உள்ளது. இந்த தகவல்கள் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் இடம் பெற்றுள்ளன. மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் சாசன அமர்வு
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குதாரர்கள் தரப்பில் எடுத்துக்கூறியபோது, நீதிபதிகள், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 5 மூத்த நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தனர். அந்த அமர்வின்முன் இந்த வழக்கின் விசாரணை 13-ந் தேதி நடைபெறும் என்றும் கூறினர்.
இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் உறையில் போட்டு மூடி முத்திரையிட்டு 13-ந் தேதி அரசியல் சாசன அமர்வின் முன் தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.