Breaking News
அடுத்த பருவமழை காலத்துக்குள் நிரந்தர தீர்வு காணப்படும் எடப்பாடி பழனிசாமி

ஏரிப்பகுதியில் வீடுகள் கட்டியிருப்பதால் வெள்ளநீர் வெளியேறவில்லை என்றும், அடுத்த பருவமழை காலத்துக்குள் இதில் நிரந்தர தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறைகளின் செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் நிறைவில், நிருபர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்தும், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், இனி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. எதிர்வருகின்ற மழைக்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும், விளக்கமாக, விரிவாக ஆலோசிக்கப்பட்டு, எதிர்வரும் காலங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் அகற்றப்பட வேண்டுமென்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மழைவெள்ளத்தின்போதுதான் நீர்நிலைகளை தூர்வாருவது குறித்து அரசாணை வெளியிட்டிருக்கின்றீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:- அப்படியில்லை, ஒவ்வொரு ஆண்டும், ஏற்கனவே பருவமழைக்கு முன்பு தூர்வாருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த நிதியிலிருந்து தூர்வாரப்படுகிறது.

கேள்வி:- குடிமராமத்து பணிகள் இந்த மழைக்கு எந்த அளவிற்கு கைகொடுத்திருக்கிறது?

பதில்:- குடிமராமத்தை பொறுத்தவரையில், நீர்நிலைகளில் அதிகமான தண்ணீர் உயரக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாக நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி:- பருவமழை பெய்து, மழை நிவாரணப் பணிகள் மேற்கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணி, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?

பதில்:- அதெல்லாம் தவறு. ஏற்கனவே திட்டமிட்டு சுற்றுப்பயணம் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் எப்படி கையாளப்பட வேண்டும், எப்படி நிர்வாகம் செய்யப்பட வேண்டுமென்ற நல்ல நிகழ்வுக்காகத்தான் சென்றிருக்கின்றார். சுற்றுப்பயணம் செல்லவில்லை.

3 மாத மழை 5 நாளில்….

கேள்வி:- இப்போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மழைநீர் பாதிப்பு குறித்த சேதம் ஏதும் கணக்கிடப்பட்டுள்ளதா?

பதில்:- இது பருவமழை, புயலோ, வெள்ளமோ அல்ல. பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. 56.6 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சுமார் 75 சதவீதம் பொழிந்துள்ளது. மூன்று மாதத்தில் பொழிய வேண்டிய மழை, 5 நாட்களில் பொழிந்துள்ளது. இந்த அளவிற்கு மழை பொழிந்தாலும்கூட, அரசு உடனுக்குடன் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஏற்கனவே தூர்வாரியதன் காரணமாக, இன்றைக்கு குறுகிய காலத்தில் தேங்கியிருந்த மழைநீர் முழுதும் வெளியேற்றப்பட்டிருக்கிறது.

பிரதமரிடம் கோரிக்கை

கேள்வி:- தமிழக அரசின் சார்பாக உடனடி நிவாரணமாக ரூபாய் ஆயிரத்து 500 கோடி மத்திய அரசிடமிருந்து கேட்டிருக்கின்றீர்கள். போன முறை வர்தா புயல் சமயத்தில் போதுமான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறபோது, இந்த முறை நீங்கள் கேட்டுள்ள தொகை கிடைக்குமா?

பதில்:- ஏற்கனவே, 2015-ம் ஆண்டில், புயல், வெள்ளம் வந்தபோது வெள்ள நிவாரணத்திற்கு தேவையான நிதி வேண்டுமென்று பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். உடனடியாக பிரதமர் நிதியை ஒதுக்கினார்.

இப்போதும்கூட, “தினத்தந்தி”யின் பவள விழாவிற்கு வந்திருந்தபோது பிரதமர் நமக்கு நேரம் கொடுத்து, நம்மிடத்தில் விளக்கத்தைக் கேட்டுப் பெற்றார். நாங்களும் விவரமாக மத்திய அரசுக்கு மனு அனுப்பியிருக்கின்றோம். நிதி கிடைக்கும்.

கேள்வி:- பருவ மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி எப்பொழுது தொடங்கப்படும், அதற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தொகை எவ்வளவு?

பதில்:- இது பருவமழை ஆரம்பம், இன்னும் டிசம்பர் வரையிலும் நமக்கு காலம் இருக்கின்றது. டிசம்பர் வரை மழை முழுவதும் பொழிந்தபிறகு தான் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கிட முடியும். இப்போது எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதோ அந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

கேள்வி:- இப்போதும் நிறைய இடங்களில் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்திருக்கிறது. அதற்கு ஆக்கிரமிப்புதான் காரணம் என்கிறார்கள். அதனை அகற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

பதில்:- இது தற்போது ஏற்பட்ட ஆக்கிரமிப்பு அல்ல. இவை ஏரிப்பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள். இன்றைக்கு சென்னை மாநகரைப் பொறுத்தவரை, 25 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு அனைத்தும் கட்டிடங்கள் நிறைந்த பகுதி. அதிக மழை பொழிகின்றபோது, சாலைகளின் வழியாகத்தான் மழைநீர் வெளியேற முடியும்.

4 செ.மீ. பொழியும் மழையின் அளவிற்குத்தான் பாதாள சாக்கடை வசதி இருக்கின்றது. எல்லா நகரங்களிலுமே, தமிழ்நாடு மட்டுமல்ல, உலக அளவில் எடுத்துக்கொண்டாலும், நகரப்பகுதிகளில் நீர் அன்றாடம் வெளியேறுவதற்கு உண்டான கால்வாய்களைத்தான் அமைத்திருக்கிறார்கள். கனமழை பொழிகின்றபோது, அதிகமான மழைநீர் வருகின்றபோது, அனைத்தும் கட்டிடங்களாக இருக்கின்ற காரணத்தினால் அந்த மழைநீர் சாலைகள் வழியாகத்தான் செல்கின்றது.

அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகின்றது. அதுதான் காரணம்.

பருவமழை அதிகமாக பொழிகின்ற காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழைநீரை வடிகால் வசதியுடன் வெளியேற்றுவதற்காக அந்த பணிகள் படிப்படியாக செயலாக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கேள்வி:- கடந்த முறை மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலேயே, இந்த முறையும் தேங்கியுள்ளது. அதற்கான காரணங்களை இந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசித்தீர்களா? நிரந்தர தீர்வு காண ஏதேனும் முக்கிய முடிவுகள் இந்த ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டதா?

பதில்:- நிரந்தர தீர்வு காண்பதற்காகத்தான், நான் விளக்கமாக கூறியிருக்கிறேன். ஜெயலலிதாவினால் வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக ரூ.4 ஆயிரத்து 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்ட பணி தொடங்கப்பட்டு, இன்னும் இரண்டு கட்டப்பணிகள் தொடங்க இருக்கிறது. அதுமட்டுமல்ல, தாழ்வான பகுதிகளில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள் இருக்கின்றன. அதற்கு வழிகண்டு அவற்றை அகற்றிக்கொண்டிருக்கின்றோம்.

அமைச்சர்கள், அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு, இரவு பகல் பாராமல், சென்னை மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை மின்மோட்டார் வைத்து உடனடியாக வெளியேற்றினார்கள். அதன் காரணத்தினால் இன்றைய தினம் சென்னை மாநகரத்தில் எங்கேயும் நீர் இல்லாத அளவிற்கு அரசு எடுத்த நடவடிக்கையைக் காணமுடிகின்றது. அரசைப் பொறுத்தவரை, துரித நடவடிக்கைகளை எடுத்துதான் வருகின்றது. வீடுகளை இடிக்காமல், இருக்கின்ற வழிகளை வைத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தண்ணீர் அகற்றப்படவேண்டும் என்கிற சூழ்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசு தக்க நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற 15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதியில் இருக்கின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்துள்ள பகுதி. அந்த ஏரிகள் நிறைந்த பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் வீடுகள் கட்டியுள்ள காரணத்தினால் மழைநீர் வெளியேறாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்டிருக்கிறோம். அவர்களும் அப்பணிகளை மேற்கொள்வார்கள். இந்த பருவமழை டிசம்பர் வரை பொழியும். அதன்பிறகு நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.