புதுச்சேரியில் பதிவுசெய்த சொகுசு காருக்கு கேரளாவில் வரி செலுத்த முடியாது நடிகை அமலாபால் முரண்டு
புதுச்சேரியில் பதிவுசெய்த தனது காருக்கு கேரளாவில் வரி செலுத்த முடியாது என நடிகை அமலாபால் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் காரை பதிவுசெய்து கேரளாவில் லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக திரைத்துறையினர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில், நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி போன்றோர் புதுச்சேரியில் தங்கியுள்ளதாக வீட்டு வாடகை ஆவணம் பெற்று, தங்கள் கார்களை பதிவு செய்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத்துறை இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் புதுச்சேரியில் பதிவுசெய்த வாகன ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகை அமலாபால் புதுச்சேரியில் தனது காரை பதிவு செய்தபோது அளித்த வீட்டு வாடகை ஆவணம் போலியானது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக கேரளாவில் அந்த காருக்குரிய வரியை செலுத்த வேண்டும் என நடிகை அமலாபாலுக்கு, எர்ணாகுளம் மோட்டார் வாகனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அமலாபால் மோட்டார் வாகனத்துறைக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் ‘தான் சினிமா படப்படிப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருவதால், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட தனது காருக்கு கேரளாவில் வரி செலுத்த முடியாது’ என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேரள மோட்டார் வாகனத்துறை ஆலோசித்து வருகிறது.