Breaking News
ஓய்வு குறித்து விமர்சனம்: எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு டோனி விளக்கம்

வாழ்க்கையில் கருத்து கூற எல்லோருக்கும் உரிமை உண்டு. அது மதிக்கப்பட வேண்டும் என்று டோனி தெரிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து விமர்சனம்நியூசிலாந்துக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டதை தொடர்ந்து டோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது. ‘20 ஓவர் போட்டியில் டோனி நிதானமாக விளையாடுவதாகவும், இளைஞர்களுக்கு வழிவிட்டு 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி விலக வேண்டும்’ என்று முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

‘டோனி சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவர் தேவையில்லாமல் குறி வைக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறார்’ என்று கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் கேப்டன் கவாஸ்கர், முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் உள்பட பலர் டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

டோனி கருத்துஇந்த நிலையில் 36 வயதான டோனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகளாவிய கிரிக்கெட் அகாடமியை நேற்று முன்தினம் தொடங்கினார். துபாயை சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அர்கா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார். இந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த அகாடமி திறப்பு விழாவில் கலந்து கொண்ட டோனி தன் மீதான விமர்சனம் குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெருந்தன்மையாக அவர் கூறியதாவது:–

வாழ்க்கையில் அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு. அது மதிக்கப்பட வேண்டும். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடுவது எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. ஏனெனில் இந்திய அணிக்காக ஒரு குறிப்பிட்ட காலம் தான் விளையாட முடியும். ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை விளையாட முடியும். ஒரு சிலர் 20 ஆண்டுகள் வரை விளையாடலாம். 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ஒருவர் 10 முதல் 15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவது என்பது ஒன்று பெரிய வி‌ஷயமல்ல. ஆடும் காலத்தில் மட்டும் தான் எனது நாட்டுக்காக விளையாடுகிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும்.

செயல்பாடு முக்கியம்நமது திறமை மீது எப்பொழுதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஆட்டத்தின் முடிவை விட செயல்பாடு தான் மிகவும் முக்கியமானது என்பதை நான் நம்புபவன். நான் ஒருபோதும் முடிவுகள் பற்றி கவலைப்பட்டதில்லை. ஆட்டத்தில் எத்தனை ரன் தேவையாக இருந்தாலும், அப்போது எது சரி என்று தோன்றுகிறதோ அதை தான் செய்து வந்துள்ளேன். நான் எனது சிறந்த முயற்சியை வெளிப்படுத்திய நிலையில் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நேர்மையாக ஏற்றுக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.