Breaking News
‘சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மைதான்’ விசாரணை குழு அறிக்கையில் பரபரப்பு தகவல்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த விசாரணை குழு அறிக்கையில் பரபரப்பு தகவல் இடம் பெற்றுள்ளது.

சசிகலாவுக்கு சொகுசு வசதிகள்
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி. மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி பரபரப்பு அறிக்கையை தனது உயர் அதிகாரியான சிறைத்துறை டி.ஜி.பி. யாக இருந்த சத்தியநாராயணராவிடம் வழங்கினார்.

அந்த அறிக்கையில் தாங்களே அதாவது சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சட்டவிரோதமாக இந்த வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியே ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.

விசாரணை குழு

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உயர்மட்ட குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

ஒரு வாரத்தில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி அந்த குழுவுக்கு மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பின்னர் அந்த குழுவுக்கு மேலும் காலஅவகாசத்தை அரசு வழங்கியது. மொத்தம் 2 தடவை இந்த குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டது.

ராமலிங்கரெட்டி பேட்டி

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது. இதுகுறித்து போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டியிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அடுத்த முறை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும். இல்லையெனில் முதல்-மந்திரியிடம் ஆலோசனை நடத்தி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்த நானே முடிவு எடுப்பேன்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

முறைகேடுகள் உண்மை

பெங்களூரு பரப்பனஅக்ரஹரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், மேலும் சிறையில் பல முறைகேடுகள் நடந்ததும் உண்மை தான் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.