Breaking News
ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் :சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை சென்றார். பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு  கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் இருந்தார்.
பின்னர், காந்திபுரத்தில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர்  கோவை நகரை வெகுவாக பாராட்டினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறுகையில், “   தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும். கோவை மாவட்டம் 89.23 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். கோவை பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் மற்றும் கழிப்பறைகள் சிறப்பாக உள்ளன
கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.