Breaking News
ஜிம்பாப்வே ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கவில்லை: ராணுவம் மறுப்பு
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே கடந்த 1980 ஆம் ஆண்டு பிரிட்டிசிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது முதல் அந்நாட்டு அதிபராக ராபர்ட் முகாபே பதவி வகித்து வருகிறார். ஜிம்பாப்வே நாட்டின் சக்தி வாய்ந்த தலைவராக ராபர்ட் முகாபே(வயது 93) அறியப்படுகிறார்.  இந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய சாலைகளில் திடீரென, ராணுவம் குவிக்கபட்டது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டனர்.  அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும், அதிபரின் உரையை நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனால், ஜிம்பாப்வே ஆட்சியை ராணுவம் கையகப்படுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியானது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஜிம்பாப்வேயில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதால், அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில்,  ராணுவ புரட்சி என்ற தகவலை அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் “ அரசை ராணுவம் கைப்பற்றும் முயற்சி இது இல்லை. அதிபர் ராபர்ட் முகாபேவை சுற்றியுள்ள குற்றவாளிகளை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதிபர் அருகாமையில் இருந்த குற்றம் செய்த நபர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம். எங்கள் பணி முடிந்தவுடன் வெகு விரைவில் இயல்பு நிலை திரும்பும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.