டெல்லியில் காற்று மாசு: மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த விராட் கோலி வேண்டுகோள்
தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் நிலவும் புகை மூட்டத்தால் வாகனப் போக்குவரத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் உடல்நலத்திற்கும் ஆபத்து அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் எடுத்தது.
இந்த நிலையில், டெல்லியைச்சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெல்லி காற்று மாசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது:-டெல்லியில் மாசுபாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நிறைய பேர் இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவாதித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு அனைவரும் பொறுப்பு ஏற்கவேண்டும்.
நாம் அதற்காக என்ன செய்கிறோம்? பொதுமக்கள் பஸ், மெட்ரோ, ஓலோ ஷேர் போன்றவற்றில் பயணிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு இதைச் செய்தால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் சிறிய செயல்பாடுகள் பெரிய விளைவை உண்டாக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.