Breaking News
பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிடவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமி‌ஷனர், போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளை பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்து, மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சி கொள்கைக்காக குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் மத்திய அரசும், கவர்னரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆய்வுகள் மாநிலத்தில் ‘இரண்டு தலைமை’களை உருவாக்கி, அரசு நிர்வாகத்தை அடியோடு ஸ்தம்பிக்க வைக்கும்.

மாநில உரிமைகள் பறிபோவது பற்றியோ, மாநில நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது குறித்தோ கருத்து சொல்லும் முதுகெலும்பு இல்லாமல், ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது ‘குதிரை பேர’ அரசு. இந்த அரசு அகற்றப்படுவதற்குள் மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்விடும் ஆபத்தான சூழலில் தமிழகம் இப்போது இருப்பது கவலையளிக்கிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு பிறப்பிக்காத ஒரே காரணத்தால் ஆயுளை நீடித்துக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் முதல்–அமைச்சருக்கு, கவர்னரின் ஆய்வு குறித்து கருத்துக்கூறும் திராணி இல்லை. ஆனால், மாநில சுயாட்சி கொள்கையினை நாட்டில் உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் கற்றுக்கொடுத்த தி.மு.க. இதுபோன்ற ‘கவர்னர் ஆய்வுகளை’ உறுதியாக எதிர்க்கிறது.

தமிழ்நாடு என்பது புதுச்சேரி அல்ல. மாநில நிர்வாகத்தில் தலையிட புதுச்சேரி கவர்னருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழகத்தில் உள்ள கவர்னருக்கு இல்லை. கவர்னருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையை அரசியல் சட்டம் உருவாக்கியுள்ளதே தவிர, ஒரு அரசின் அன்றாட நிர்வாக பணிகளில் தலையிட்டு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க கவர்னர் பதவி நிச்சயமாக இல்லை.

ஒரு ‘பொம்மை அரசை’ இங்கே வைத்துக்கொண்டு கவர்னர் மூலம் மாநிலத்தை நிர்வாகம் செய்திடலாம் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கருதுகிறதோ என்று எழுந்த சந்தேகம் கவர்னர் நடத்திய ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘கவர்னர் பதவி, ஆட்டுக்குத் தாடி எப்படி தேவையில்லையோ அதைப்போன்றது’, என்பது தி.மு.க.வின் நீண்டகால கொள்கையாக இருந்தாலும், அந்த பதவி இருக்கும்வரை அதற்குரிய மதிப்பும், மரியாதையும் அளிக்கவேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரெல்லாம் எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம். ஆகவே, தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த கவர்னர் விரும்பினால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று தன் அதிகாரத்தை பயன்படுத்தி முதலில் உத்தரவிடவேண்டும்.

அதை விடுத்து இப்படி அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய–மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது. ஆகவே, அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தை பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு பேரிடரை ஏற்படுத்தி விடவேண்டாம் என்றும், இது போன்ற ஆய்வுகளை உடனடியாக கைவிடுமாறும் கவர்னரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.