முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப கொல்கத்தா மாநகராட்சி முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலிக்கு கொல்கத்தா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்ப
முடிவு செய்துள்ளது. கங்குலியின் மூத்த சகோதரரும் முன்னாள் ராஞ்சி வீரருமான ஸ்னேஹசிஸ் கங்குலி அண்மையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அங்குள்ள நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பேலாவில் உள்ள கங்குலியின் வீட்டில் சுகாதரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கங்குலியின் வீட்டில் இருந்த கழிவு நீர் தேங்கும் இடங்களில் டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்று தெரிவிவித்து விட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து மீண்டும் நேற்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது, கங்குலியின் வீட்டில் டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் அவரது வீட்டு வளாக்த்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிகளின் படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து அரசு அறிவிப்பின் படி 35 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.