‘விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்’ சானியா, மிதாலிராஜ் வற்புறுத்தல்
8–வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த விளையாட்டு குறித்த விவாதத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ், இந்திய பேட்மிண்டன் அணி பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மிதாலிராஜ் பேசுகையில், ‘பள்ளிகளில் விளையாட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அதிக மாணவிகள் விளையாட வாய்ப்பு கிடைக்கும். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை தொடர்ந்து இளம் வீராங்கனைகள் பலருக்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை. விளையாட்டில் ஈடுபட விரும்பும் இளம் வீராங்கனைகளுக்கு வழிகாட்ட சரியான முறை இல்லாதது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
இதே கருத்தை வலியுறுத்திய சானியா மிர்சா மேலும் பேசுகையில், ‘நான் டென்னிஸ் ஆட தொடங்கிய காலகட்டத்தில் சாணத்தால் பூசிய ஆடுகளங்களை தான் பயன்படுத்தினோம். அப்போது கடின அல்லது களிமண் ஆடுகளம் கிடையாது. தற்போது 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் கூட குறைந்தபட்சம் 1,000 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இது வீரர்–வீராங்கனைகளிடம் உள்ள விளையாட்டு ஆர்வத்தை காட்டுகிறது’ என்றார்.