இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் – பிரதமர் மோடி வழங்குகிறார்
பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ருவாண்டா அதிபர் பால் ககமே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்தார். இப்போது பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு சென்று இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். ருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
ருவாண்டா அரசு, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் இலவசமாக 200 பசுக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பசுக்களை வழங்குகிறார். ருவாண்டாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) உகாண்டா செல்லும் பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.
பின்னர் உகாண்டாவில் இருந்து நாளை தென் ஆப்பிரிக்கா செல்லும் மோடி அங்கு 27-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் 10-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ராமபோசாவை சந்தித்து பேசுகிறார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.