Breaking News
12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கற்பழித்தால் தூக்குத்தண்டனை – நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல்

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது. இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்தது.

இந்த நிலையில் 12 வயது மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளையும், பெண்களை தனியாகவும், கூட்டாகவும் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கூடுதல் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “12 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவமும், 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. இதுமாதிரியான சம்பவங்கள் அதிகரித்தும் வருவதும் வேதனை அளிக்கிறது. இதனால் சமூகத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபோன்ற குற்றங்களை தடுக்கவும், இதற்கு தண்டனையை அதிகரிக்கவும் சட்ட ரீதியான நடைமுறைகள் அவசியமாகிறது. எனவே 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது” என்றார்.

இச்சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டால் உடனடியாக சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்து விடும். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் நீக்கப்பட்டு விடும்.

இந்த சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-

* 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்த பட்சம் 20 ஆண்கள் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது அதிக பட்சமாக தூக்குத்தண்டனை விதிக்கப்படும்.

* 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 வருடங்களாக அதிகரிக்கப்படுகிறது. குற்றத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாகவும் இது மாற்றப்படும். அதன்படி சாகும்வரை குற்றவாளி சிறைவாசத்தை அனுபவிக்கவேண்டும்.

* 12 வயது மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை சாகும்வரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம்.

* பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது அளிக்கப்பட்டு வரும் 7 வருட சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. குற்றத்தின் தன்மையை பொறுத்து இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த சட்ட மசோதாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடித்து கோர்ட்டால் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. யாராவது மேல் முறையீட்டுக்கு சென்றால் அதிகபட்சமாக 6 மாதங்களில் வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவேண்டும்.

* 12, 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் அல்லது கூட்டு பலாத்காரம் செய்ததாக எழுகிற குற்றச்சாட்டின் கீழ் யாருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் திவாலா சட்ட திருத்த மசோதாவை நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். “இந்த சட்டம் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவானது, அரசு அவர்களை ஊக்குவிக்கவே இதைக் கொண்டு வருகிறது. மேலும் இது சிறு நிறுவனங்களை பாதிக்கும்” என்று பா.ஜனதா எம்.பி. பர்துஹரி மஹ்தாப் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “இது தொடர்பான முந்தைய சட்டங்கள் பலவீனமாக உள்ளன. இதனால் கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல் பெரும் பணக்காரர்கள் எளிதாக தப்பினர். காங்கிரஸ் காலத்தில் இதில் எச்சரிக்கையாக நடந்த கொண்டிருந்தால் இப்பிரச்சினையே எழுந்திருக்காது. இனி அப்படி நடக்காது” என்று பதில் அளித்தார்.

இதேபோல் மாநில அரசுகள் வர்த்தக கோர்ட்டுகளை அமைத்துக் கொள்ள வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, தேசிய பல்கலைக்கழக மசோதா, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வளர்ச்சி சட்ட திருத்த மசோதா, ஓமியோபதி கவுன்சில் சட்ட திருத்த மசோதா ஆகியவையும் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.