கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 40 பேர் பலி; 100 பேர் காயம்
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள பீச் பகுதியில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நகருக்கு கிழக்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டி என்ற பகுதியில் சாலையில் 4 பேர் இறந்து கிடந்து உள்ளனர் என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களில் ஒருவர் காரிலும், மற்றொருவர் வாகனத்தின் அடியிலும் கிடந்தனர். 2 பேர் மோட்டார் சைக்கிளின் மீது இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் இருந்த பீச்சில் இருந்து தப்பிப்பதற்காக சென்றபொழுது உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இதேபோன்று சுகாதார அமைச்சகம் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தி உள்ளது. இந்த எண்ணிக்கை உயர கூடும் என அரசு அதிகாரிகள் கூறினர். இதுவரை 104 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தகவல் தெரிவிக்கின்றது.
டென்மார்கை சேர்ந்த 4 சுற்றுலாவாசிகள் உள்பட பலர் காணாமல் போயுள்ளனர் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது போஸ்னியா நாட்டிற்கான சுற்று பயணத்தினை ரத்து செய்துள்ளார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் நாடு முழுவதும் வீடுகள் சேதமடைந்து உள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. பொது மக்கள் தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அந்நாட்டின் மேயர் ஒருவர் 100 வீடுகள் மற்றும் 200 வாகனங்கள் தீயில் எரிந்து கருகியுள்ளன என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.