Breaking News
அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்: ஈரான் மிரட்டல்

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசும்போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார்.

அவர் கூறுகையில், “நீங்கள்(டிரம்ப்) சிங்கத்தின் வாலை(ஈரான்) பிடித்து விளையாட வேண்டாம். இதற்காக பிறகு நீங்கள் மிகவும் வருத்தப்படவேண்டி இருக்கும். ஈரான் சமாதானத்தின் தாய். எனவே எங்களுடன் சமாதானமாக செல்லுங்கள். மாறாக ஈரானுடன் போரிட்டால் ஈரான் போர்களின் தாய் என்பதை உங்களுக்கு உணர வைக்கும்” என்று எச்சரித்து இருந்தார்.

இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரும் தகுந்த பதிலடி கொடுத்தார். இதுபற்றி டுவிட்டரில் டிரம்ப் ஈரானிய அதிபருக்கு அளித்துள்ள பதிலில், “இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஈரான் மீண்டும் மிரட்டல்

இந்த நிலையில், ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், “அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்” என ஈரான் சிறப்பு படை கமாண்டோ அதிபர் டிரம்பை எச்சரித்துள்ளார். டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் என்று மேஜர் ஜெனரல் கசிம் உறுதி பூண்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டன்ஸிம் செய்தி வெளியிட்டுள்ளது.அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருபோதும் அமெரிக்காவை மிரட்ட வேண்டாம் என்று ஈரான் அதிபரை எச்சரித்து பதிவிட்டதை தொடர்ந்து கசிம் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.