Breaking News
‘சஞ்சிதா சானு ஊக்க மருந்து விவகாரத்தில் நிர்வாக தவறு நடந்து விட்டது’ – சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் ஒப்புதல்

2014 மற்றும் 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக ஊக்க மருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் சேகரித்தது. இந்த ஊக்க மருந்து சோதனையின் முடிவை உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் கடந்த மே மாதம் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் சமர்ப்பித்தது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் சஞ்சிதா சானுவை இடைநீக்கம் செய்தது. தான் எந்தவித ஊக்க மருந்தையும் பயன்படுத்தவில்லை என்று மறுத்த சஞ்சிதா சானு, அந்த சோதனை மாதிரி என்னுடையது தானா? என்பதை அறிய டி.என்.ஏ.சோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தங்களது நிர்வாக குளறுபடியால் சஞ்சிதா சானு ஊக்க மருந்து விவகாரத்தில் தவறு நடந்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது.

வீராங்கனையிடம் இருந்து சேகரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுநீர் மாதிரியின் நம்பர் மாறியதால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் நிம்மதி அடைந்துள்ள சஞ்சிதா சானு, இந்த தவறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.