Breaking News
தமிழ் தலைவாஸ் அணி சார்பில் நிறுவனங்கள், பள்ளி அணிகளுக்கான கபடி போட்டி

புரோ கபடி லீக் போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. தமிழ் தலைவாஸ் அணி சார்பில் மாநிலம் முழுவதும் கபடியை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் சார்பில் நிறுவனங்களுக்கு இடையிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இருபாலருக்கான இந்த போட்டியில் டி.சி.எஸ்., ஐ.பி.எம்., எச்.டி.எப்.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

மேலும் பள்ளி அணிகளுக்கான முதல் சுற்று கபடி போட்டி சென்னை, மதுரை, கோவை, சேலம், திருவள்ளூர், தஞ்சாவூர், நெல்லை, புதுச்சேரி ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெறுகிறது. ஒவ்வொரு நகரங்களில் நடைபெறும் போட்டியிலும் 12 ஆண்கள், 12 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு நகரங்களில் நடைபெறும் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். மாநில அளவிலான போட்டி சென்னையில் செப்டம்பர் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஆண்ட்ரியா, தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் கோபு, ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா, தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வீரென் டிசில்வா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் கோபு, ஜெயசீலன் ஆகியோர் பேசுகையில், ‘புரோ கபடி லீக் போட்டியால் கபடி ஆட்டம் மிகவும் பிரபலம் அடைந்து இருக்கிறது. நிச்சயம் கிரிக்கெட்டை விட கபடி அதிக வளர்ச்சியை எட்டும். வரும் தலைமுறை வீரர்களுக்கு இந்த போட்டி அருமையான வாய்ப்பாகும். கபடி வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கினால் நமது மாநிலத்தில் கபடி ஆட்டம் மேலும் முன்னேற்றம் காணும்’ என்று தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.