Breaking News
மக்களவை தேர்தலில் பிரியங்கா போட்டி?- காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகம்

சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது.

1999-ல் சோனியா காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உ.பி.யின் அமேதி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதன் பிரச்சாரத்திற்காக முதன் முதலாக களம் இறங்கினார் பிரியங்கா. இவர், பெல்லாரி தொகுதியில் அதிகமாக பிரச்சாரம் செய்தார். அங்கு பாஜகவின் சார்பில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜை வென்றார் சோனியா. பிறகு தொடர்ந்து அமேதி மற்றும் ராய் பரேலி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காகவும் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார் பிரியங்கா. இவர், கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களாக போட்டியிடக் களம் இறக்கப்படுவார் என காங்கிரஸார் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், 2019-ல் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார் எனும் சர்ச்சை மீண்டும் கிளம்பி உள்ளது. தன் உடல்நிலை கருதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகிக் கொண்டார்.

அதையடுத்து, காங்கிரஸ் தலைவரான ராகுல், வழக்கமாக தான் போட்டியிடும் அமேதி தொகுதியை மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்சியாக சோனியா வரும் மக்களவையில் போட்டியிட மாட்டார் எனவும், அவரது ராய்பரேலி தொகுதிக்கு ராகுல் மாறி விடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, அமேதியில் பிரியங்கா போட்டியிடும் வாய்ப்புகள் தெரிவதாக காங்கிரஸார் கருதுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘பிரியங்கா வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார் என நம்புகிறோம். எப்போதும் இல்லாத வகையில் அவர் இந்தமுறை கட்சி செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், மற்ற எதிர்கட்சி தலைவர்கள் பிரியங்காவை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட வைக்கக் கோரி வருகின்றனர்’’என்றனர்.

கடந்த முறை பிரதமர் வேட்பாளரான மோடியை வாரணாசியில் எதிர்த்த ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது நிலை பெற்றார். எனவே, வரும் தேர்தலில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ், மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பவில்லை எனக் கருதப்படுகிறது. அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் சார்பில் ஒரு உறுதியான வேட்பாளரை போட்டியிட வைக்க விரும்புகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.