Breaking News
அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய 5 பேருக்கு ஜாமீன்: பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல்

அமெரிக்காவில் நியூமிக்சிகோ மாகாணத்தில் டாவோஸ் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்துக்கொண்டு, பட்டினி போடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 11 குழந்தைகள் இப்படி பட்டினி போடப்பட்டிருந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பின்னர் அங்கு ஒரு குழந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 5 பேர் மீது சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பயிற்சி அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள், 3 பெண்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் சர்ச்சைக்கு உரிய அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கேட்டு டாவோஸ் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் சிறுவர்களை தவறாக பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரத்தை போலீசார் தாக்கல் செய்வதற்கு தவறி விட்டதாக கருதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சாரா பாக்கஸ் என்ற பெண் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

இதையடுத்து அந்த பெண் நீதிபதியை ஒருவர் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து, “உங்களை கழுத்தை அறுத்து கொலை செய்வோம்” என மிரட்டல் விடுத்து உள்ளார். இன்னொருவர், “ உங்கள் தலையை நசுக்கி விடுவோம்” என மிரட்டி இருக்கிறார். அவருக்கு இப்படி எண்ணற்ற மிரட்டல்கள் தொலைபேசி, இ மெயில் வழியாக வந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கோர்ட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.