Breaking News
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர் ஆனார்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது. அந்தக் கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கட்கிழமை கூடியது. இதில் இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவர் பிலாவல் சர்தாரி பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து புதன்கிழமை (நேற்று) சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி, மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத் கைசரை களம் இறக்கியது. 11 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் சையத் குர்ஷித் ஷா நிறுத்தப்பட்டார்.

நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தேர்தல் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.பி.க்கள் சபைக்கு வர தாமதம் ஏற்பட்டதால், தேர்தல் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அனைத்து எம்.பி.க்களும் ஓட்டு போட்டனர். அதைத் தொடர்ந்து ஓட்டுப்பெட்டி நாடாளுமன்ற செயலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் வெற்றி பெற்றார். அவருக்கு 176 ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட சையத் குர்ஷீத் ஷா 146 ஓட்டுகள் பெற்றார். 8 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் ஆகும். முன்னாள் சபாநாயகர் ஆயாஸ் சாதிக், சபாநாயகர் தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவித்தார்.

வெற்றி பெற்ற ஆசாத் கைசர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்த தலைவர்கள், எம்.பி.க்களை சந்தித்து அவர்களுடன் கை குலுக்கினார். அவர்கள், புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதையடுத்து ஆசாத் கைசர் புதிய சபாநாயகராக பதவி ஏற்றார். அவருக்கு முன்னாள் சபாநாயகர் ஆயாஸ் சாதிக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதையடுத்து அவர் சபையை நடத்தினார். சபையில் அமளி நிலவியது. அவர் அமைதியை நிலை நாட்ட முயற்சித்தும் அது பலன் தரவில்லை. இதையடுத்து அவர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார். புதிய சபாநாயகர் ஆசாத் கைசர், கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.