முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) காலமானார். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமரும், இந்தியாவின் உண்மையான திறைமையான அரசியல் தலைவருமான வாஜ்பாய் மறைவு தொடர்பான செய்தி மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுமைமிக்க, முதிர்ச்சியான தலைவரை இந்தியா இழந்துவிட்டது, இது அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, என்னிடம் வார்த்தைகள் இல்லை, உணர்ச்சிகளால் நிறைந்துள்ளேன். நம்முடைய மரியாதைக்குரிய அடல்ஜி நம்முடன் இல்லை. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் இத்தேசத்திற்காக அர்ப்பணித்தவர் என கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், சிறந்த மகனை நாடு இழந்து விட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டவர் மற்றும் மதிக்கப்பட்டவர். அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருடைய ஆர்வலர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அவரை இழந்துவிட்டோம் என கூறியுள்ளார்.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், “இது நமக்கு மிகவும் வேதனையான நிமிடமாகும், இப்போது அடல்ஜி இல்லை. அவருடைய உடல் அவருடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்,” என கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது.
இந்தியா ஒரு மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளது. தனது முழுவாழ்க்கையை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும், வேதனையையும் தெரிவித்து வருகிறார்கள்.