Breaking News
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை குறிப்பு

வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர்.

குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

வாஜ்பாய் கவிதை எழுதுவதில் வல்லவர் , தேசபக்தி கவிதைகளாக எழுதுவார்.

பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய் பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் வாஜ்பாய் அரசியலில் நுழைந்தார்.

1941ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1942ல் மகாத்மாகாந்தி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு‘ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

1946ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய ‘ராஷ்டிரீய தர்மா‘ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புதிதாகத்தொடங்கிய சில பத்திரிகைகளின் ஆசிரியரானார். அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவருடைய எழுத்தாற்றல் வெளிப்பட்டது.

1950ல் ‘ஜனசங்கம்‘ கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 1951ம் ஆண்டு லக்னோ தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தார். எனினும் பிறகு அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1962, 1986ம் ஆண்டுகளில் டெல்லி மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திரா காந்தி ‘நெருக்கடி நிலை‘ அறிவித்தபோது, 1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்றபோது, ஜெயப்பிரகாசரின் யோசனைப்படி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா‘ என்ற கட்சியை அமைத்தன. வாஜ்பாய் தன்னுடைய ‘ஜனசங்கம்‘ கட்சியை, ஜனதாவுடன் இணைத்தார்.

1977 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இந்திராகாந்தியும் தோல்வி அடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனதா அரசில், வெளி விவகார மந்திரியாக வாஜ்பாய் பொறுப்பு ஏற்றார். வெளிவிவகார மந்திரியாக இருந்தபோது, ஐ.நா. சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியில் உரை நிகழ்த்தினார். பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கு கொண்டார்.

1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும், பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்ததால், மந்திரிசபை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

1996ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்க இயலாமல் போனதால் 13 நாட்களில் ராஜினாமா செய்தார்.

1998ம் ஆண்டு மார்ச் மாதம் 19ந்தேதி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். பாரதீய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்ரல் 17ந்தேதி வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

1999 செப்டம்பர் அக்டோபரில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அக்டோபர் 13ந்தேதி இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக வாஜ்பாய் பதவி ஏற்றார்.

வாஜ்பாய் மக்களவைக்கு 10 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்வு செய்யபட்டு உள்ளார்.

அரசியலுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டுள்ள வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை. வாஜ்பாய், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர். கவிதைகள் எழுதுவதிலும் வாஜ்பாய் வல்லவர். இவருடைய கவிதைகளும், சொற்பொழிவுகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

பாரதீய ஜனதா கட்சித்தலைவர்களில், எல்லாக்கட்சித்தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் வாஜ்பாய்.வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதரத் தடை என மிரட்டின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக அரங்கில் நிலை நாட்டியவர் வாஜ்பாய்.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு வாஜ்பாய் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே தங்கி இருந்தார். அவரது வளர்ப்பு மகள் அவரை கவனித்து வந்தார். 1992ல் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்‘ விருது வழங்கி கவுரவித்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.