அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 20-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக கடந்த 13-ந் தேதி அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து இருந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 20-ந் தேதி நடைபெற இருந்த செயற்குழு கூட்டத்தை தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைத்துள்ளதாக அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
20-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
கட்சி செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு தவறாமல் வருகைதந்து, செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.