கத்தாருக்கு திருப்பி அனுப்ப இருந்த செனகல் நாட்டு வாலிபர் தப்பி ஓட்டம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச்சேர்ந்த நிடியாமட்டர் (வயது 28) என்பவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர் இந்தியாவுக்கு நேரிடையாக வரக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதி பெற்று வரவேண்டும். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
திருப்பி அனுப்ப முடிவு
இதனால் குடியுரிமை அதிகாரிகள், நிடியாமட்டரை சென்னைக்குள் அனுமதிக்காமல் தனியறையில் தங்க வைத்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு அவரை கத்தார் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.
தோகாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு வந்த அந்த விமானம், அதிகாலை 4.45 மணிக்கு மீண்டும் தோகாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் அதே விமானத்தில் திருப்பி அனுப்ப முடியாததால் அவரை, கத்தார் விமான நிறுவன அதிகாரிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தப்பி ஓட்டம்
இதற்கிடையில் தனியறையில் அடைக்கப்பட்டு இருந்த நிடியாமட்டருக்கு உணவு வழங்க அறைக்குள் சென்ற விமான நிறுவன ஊழியர்கள், அறையில் இருந்த அவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கியூபிராஞ்சு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து அவர் எப்படி தப்பிச்சென்றார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தங்களுக்கு எந்தவித புகாரும் வரவில்லை என விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் ?
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளை சேர்ந்த வாலிபர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதால், தப்பி ஓடிய நிடியாமட்டர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? அல்லது பயங்கரவாத கும்பலின் பின்னணியில் உள்ளவரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.