Breaking News
நிலச்சரிவில் காரில் சிக்கித் தவித்த நடிகர் ஜெயராம், மனைவி, மகளுடன் மீட்பு

கேரளாவில் கன மழை பெய்து வருவதால் ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 35 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் அழைத்து வந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கின்றனர். வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்து உதவி கேட்டு குரல் எழுப்புகிறார்கள். அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் நடிகர்களும் சிக்கி உள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள பிருதிவிராஜ் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கிய அவரது தாயார் மல்லிகா சுகுமாரனை படகில் மீட்டனர்.

நடிகர் ஜெயராம் குடும்பத்தினரும் நிலச்சரிவில் சிக்கினார்கள். திருச்சூர் மாவட்டத்தில் ஜெயராம் தனது மனைவி பார்வதி, மகள் மாளவிகாவுடன் காரில் சென்று கொண்டு இருந்தார்.

தேசிய நெடுஞ்சாலை 544–ல் குதிரன் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தபோது, திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. உயரத்தில் இருந்து மண்சரிந்து வந்து சாலையில் விழுந்தது. இதில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கித் கொண்டன.

அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஜெயராம் காரையும் மண் சூழ்ந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வடக்கன்சேரி போலீசார் விரைந்து சென்று ஜெயராம் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இது பற்றிய படம் வைரலாக பரவி வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.