Breaking News
‘கேரள மக்களின் போராட்ட குணத்துக்கு தலை வணங்குகிறேன்’ – பிரதமர் மோடி பாராட்டு

கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நிவாரண பணிகளுக்காக நிதியுதவி அறிவித்த அவர், அங்கு சாலை, மின்சாரம் போன்ற சேவைகளை சீரமைப்பதற்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட துறைகளையும் அறிவுறுத்தினார்.

கேரள வெள்ள சேதம் குறித்து பின்னர் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறுகையில், ‘கேரள மக்களின் போராட்ட குணத்துக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் கேரளாவுடன் உறுதியாக நிற்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தனது எண்ணமெல்லாம் மழை, வெள்ளத்தில் தங்கள் உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருடனே இருப்பதாக கூறியுள்ள மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் கேரள மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மாநிலத்தை புரட்டிப்போட்ட இந்த இயற்கை பேரிடரில் இருந்து மக்களை மீட்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வரும் அதிகாரிகளையும், கேரளாவுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் அனைவரையும் பாராட்டுவதாகவும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.