Breaking News
மாநில ஜூனியர் தடகளம் மதுரை வீராங்கனை ஆஷா புதிய சாதனை

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 33–வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சண்முகமும் (காஞ்சீபுரம்), நீளம் தாண்டுதலில் மகேஷ்சும் (நெல்லை), வட்டு எறிதலில் குமாரும் (நெல்லை), சங்கிலி குண்டு எறிதலில் கோகுலும் (சென்னை), 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் சரணும் (கன்னியாகுமரி), சங்கிலி குண்டு எறிதலில் ராமச்சந்திரனும் (காஞ்சீபுரம்), உயரம் தாண்டுதலில் தேவா கார்த்திக்கும் (காஞ்சீபுரம்), டிரிபிள் ஜம்ப்பில் கே.கோகுலும் (காஞ்சீபுரம்), 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் முகமதுவும் (கன்னியாகுமரி), சங்கிலி குண்டு எறிதலில் தருணும் (கடலூர்), 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் ரீகனும் (சென்னை), நீளம் தாண்டுதலில் அஜித் குமாரும் (திருச்சி), 100 மீட்டர் ஓட்டத்தில் கார்த்திக் ராஜாவும் (சென்னை) முதலிடத்தை பிடித்தனர்.

பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் டிரிபிள் ஜம்ப்பில் மதுரை வீராங்கனை ஆஷா 12.77 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.

இதேபிரிவில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் நீலாம்பரியும் (காஞ்சீபுரம்), போல்வால்ட்டில் ஜனனி சுவேதாவும் (காஞ்சீபுரம்), 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் கெவினா அஸ்வினியும் (திருச்சி), டிரிபிள் ஜம்ப்பில் பாபிஷாவும் (காஞ்சீபுரம்), வட்டு எறிதலில் ஜென்சி சூசனும் (காஞ்சீபுரம்), 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வட்டு எறிதலில் தேவதர்ஷினியும் (கோவை), 100 மீட்டர் ஓட்டத்தில் கிருத்திகாவும் (திருவள்ளூர்), 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் தனுஷிகாவும் (கோவை), நீளம் தாண்டுதலில் சுருதியும் (காஞ்சீபுரம்), 100 மீட்டர் ஓட்டத்தில் தீப்தியும் (சென்னை) முதலிடத்தை கைப்பற்றினார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.