Breaking News
கேரளாவில் மீட்பு பணி: 4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த குடும்பத்தினர் நள்ளிரவில் படகு மூலம் மீட்பு

4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த பச்சிளம் குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை நள்ளிரவில் படகில் சென்று மீட்புப்படையினர் மீட்டனர்.

4 நாட்களாக அவதி
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மீட்புப்படையினர் சாகசம் பற்றி தகவல்கள் வெளியானவண்ணம் இருக்கின்றன.

மீட்புப்பணிக்காக, லெப்டினன்ட் கர்னல் சசிகாந்த் வக்மோடே என்ற ராணுவ அதிகாரி, கடலோர காவல் படைக்கு அயற்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான மீட்புப்படையினர், 4 நாட்களாக ஓய்வின்றி மீட்புப்பணி ஆற்றிய பிறகு, கடந்த 16–ந் தேதி இரவு, ஓய்வெடுப்பதற்காக, ஒரு அரசு ஆஸ்பத்திரியை அடைந்தனர்.

அப்போது, அங்கு அவர்களை உள்ளூர் போலீஸ் அதிகாரியும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், கிராம மக்களும் சந்தித்தனர். ஒரு வீட்டில் 4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் 6 பேர் கொண்ட குடும்பம் தவித்து வருவதாகவும், அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு இப்போதுதான் ஒரு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

‘ஆபரே‌ஷன் வாட்டர் பேபி’
அந்த குடும்பத்தினரை காப்பாற்ற கடலோர காவல் படையினர், அந்த நள்ளிரவு நேரத்திலும் புறப்பட தயாராகினர். மீட்புப்பணிக்கு ‘ஆபரே‌ஷன் வாட்டர் பேபி‘ என்று பெயரிட்டனர்.

மீட்பு படகு பயணத்தை தொடங்கிய இடத்தில் இருந்து அந்த வீடு 2 கி.மீ. தூரத்தில் இருந்தது. இரவு 10.30 மணிக்கு பயணத்தை தொடங்கினர். இரவையும், நீரோட்டத்தையும் மீறி, பயணத்தை தொடர்ந்தனர். அந்த பாதை, கற்களும், சேறும் நிறைந்ததாக இருந்தது. அதனால், சில இடங்களில் படகை தள்ளியபடியே சென்றனர்.

நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த வீட்டை அடைந்தபோது, அங்குள்ளவர்கள் மோசமான நிலையில் இருந்தனர். தங்களைக் காப்பாற்ற யாரோ வந்துள்ளனர் என்பதை கூட அவர்களால் அறிய முடியவில்லை.

ராணுவத்தில் சேர்க்க உறுதி
குழந்தை பெற்ற பெண்ணுக்கும், பிறந்த குழந்தைக்கும் சில மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. எனவே, விடியும்வரை காத்திருக்க மீட்புப்படையினர் முடிவு செய்தனர். பொழுது விடிந்தவுடன், உள்ளூர் டாக்டர் ஒருவரின் உதவியுடன் பயணத்தை தொடங்கினர். நீரோட்டம் குறைவாக உள்ள இடங்களில், குடும்பத்தினரை படகில் வைத்துக்கொண்டு, படகை அப்படியே தூக்கிச் சென்றனர். ஒருவழியாக, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

படகில் இருந்து இறங்கியவுடன், அந்த பெண், ஆனந்த கண்ணீருடன் மீட்புப்படையினருக்கு நன்றி தெரிவித்தார். தனது குழந்தையை பிற்காலத்தில் ராணுவத்தில் சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.

முதுகில் மிதித்து படகை அடைந்தனர்
மற்றொரு இடத்தில், 2 மாடிகள் கொண்ட வீட்டின் மாடியில் 2 வயது சிறுவன் மாட்டிக்கொண்டான். அவனை ஹெலிகாப்டரில் சென்ற மீட்புப்படை அதிகாரி மீட்டு, தன் மார்போடு அணைத்தபடி, கயிற்றில் ஹெலிகாப்டருடன் பறந்தார். அந்த சிறுவனை அவனுடைய தாயாரிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

அதுபோல், கல்லூரி விடுதி ஒன்றில் உணவு, தண்ணீர் இல்லாமல் பரிதவித்த சில மாணவிகள், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். கர்ப்பிணி ஒருவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.

மீட்புப்பணிக்கு சென்ற இடத்தில், மீட்கப்பட்ட பெண்கள், படகை அடைவதற்காக, ஒரு வீரர் தண்ணீருக்குள் குனிந்தபடி நிற்க, அவரது முதுகில் மிதித்தபடி அப்பெண்கள் படகை அடைந்த காட்சி, மெய்சிலிர்க்க வைத்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.