Breaking News
மழை வெள்ள பாதிப்புக்கு இடையே நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்ணுக்கு திருமணம்

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் வடக்கு மலப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அஞ்சு (வயது 24) என்பவர் வீடும் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் குடும்பத்தினருடன் அங்குள்ள தொடக்க பள்ளியில் 3 நாட்களாக தங்கியுள்ளார். அஞ்சுவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்த சமயத்தில் கனமழை பெய்யத்தொடங்கியதால் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அவர்களுடன் நிவாரண முகாமில் தங்கியிருந்த பலர் திருமணத்தை ஏன் தள்ளிவைக்கிறீர்கள், நடத்துங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள். இதுபற்றி மணமகன் ஷைஜூ குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்களும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை அஞ்சு நிவாரண முகாம் அருகில் உள்ள கோவிலுக்கு பாரம்பரிய சிவப்பு பட்டு சேலை அணிந்து நடந்து சென்றார். மணமகன் ஷைஜூவும் குடும்பத்தினருடன் அங்கு வந்துசேர்ந்தார். கோவிலில் எளியமுறையில் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் அஞ்சு மணமகன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருமணம் நிவாரண முகாமில் மழை பாதிப்பினால் சோகத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான திருமண விழாக்கள் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.