சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெர்டென்ஸ் ‘சாம்பியன்’
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் ஆகியோர் தோல்வி கண்டனர்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தை வகிப்பவரும், 7 முறை இந்த பட்டத்தை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல்முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 31 வயதான ஜோகோவிச் 1990-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஏ.டி.பி. உலக டூர் மாஸ்டர்ஸ் போட்டி (1000 தரவரிசை புள்ளி) தொடரின் எல்லா பட்டங்களையும் (9 போட்டி தொடர்) வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு ஜோகோவிச் முன்னேறினார்.
வெற்றி குறித்து ஜோகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டி தொடரில் இதற்கு முன்பு 5 முறை இறுதிப்போட்டியில் தோற்று இருக்கிறேன். அதில் பெரும்பாலான தோல்விகள் இந்த சிறந்த வீரருக்கு (பெடரர்) எதிராக தான் நடந்தது. ஒரு வழியாக இந்த பட்டத்தை வென்றதன் மூலம் எனது கனவு நிறைவேறி இருக்கிறது. காயத்துக்கு ஆபரேஷன் செய்த பின்னர் நல்ல நிலைக்கு திரும்பி விம்பிள்டன் மற்றும் சின்சினாட்டி பட்டங்களை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 2-6, 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்புக்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பரபரப்பான இந்த ஆட்டம் 2 மணி 5 நிமிடம் நீடித்தது.
‘தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை’ என்று போட்டி முடிந்த பிறகு 26 வயதான கிகி பெர்டென்ஸ் ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் பெர்டென்ஸ் தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.