Breaking News
பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 18-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களுக்கு உரையாற்றிய அவர், நாட்டின் கடன் பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் நோக்கில் தானும் எளிய வாழ்க்கை வாழப்போவதாக கூறிய இம்ரான்கான், வசதியானவர்கள் வருமான வரி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். தனது கூற்றுப்படியே அவரும் எளிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.

அதன்படி தனக்கு வழங்கப்பட்ட பிரதமரின் அதிகாரப்பூர்வ ஆடம்பர இல்லத்தை ஏற்க மறுத்த அவர், ராணுவ செயலாளருக்கு வழங்கப்படும் வீட்டில் தனது மனைவி பஸ்ராவுடன் குடிபெயர்ந்துள்ளார்.

இதைப்போல தனக்கு பணி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 524 ஊழியர்களில் வெறும் 2 பேரை மட்டுமே ஏற்றுக்கொண்டார். மேலும் தனது பயன்பாட்டுக்கு வெறும் 2 குண்டு துளைக்காத கார்களை மட்டுமே எடுத்துக்கொண்ட இம்ரான்கான், மீதமுள்ள 31 கார்களையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே இம்ரான்கான் மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள 16 மந்திரிகள் நேற்று பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.