மலேசியாவில் கதிரியக்க இரிடியம் மாயமானதால் பரபரப்பு
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே ஷா ஆலம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்காக செரம்பன் பகுதியில் இருந்து கதிரியக்க தன்மை வாய்ந்த இரிடியத்தை எடுத்துக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோலாலம்பூர் அருகே சென்றபோது இந்த பொருள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
23 கிலோ எடை கொண்ட இந்த இரிடியம், ரேடியோகிராபி தொழில்துறையில் பயன்படுத்தக்கூடியது ஆகும். கதிரியக்க தன்மை கொண்ட இந்த பொருள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால், தவறான வழிக்கு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே இரிடியம் மாயமான சம்பவம், மலேசிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
மிகவும் ஆபத்தான இரிடியம் மாயமான தகவலை அறிந்த ஐ.நா. அணுசக்தி நிறுவனம், ‘கதிரியக்க பொருள் மாயமாகி அல்லது திருடப்பட்டு பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிட்டால், அணுகுண்டு அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்துவிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.