Breaking News
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்: இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:- இறைவனை அஞ்சி, அவரது கட்டளைக்கு ஏற்ப வாழ்வோர் என்றென்றும் நிறை வாழ்வு பெற்றிருப்பார்கள் என்பது தான் இத்திருநாள் நமக்குக் கூறும் பாடம். போற்றுதலுக்குரிய இப்பெருநாளில், இறைவன் திருவுள்ளத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் வாழ உறுதி ஏற்போம். அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:- தி.மு.க. ஆட்சியில் இருந்த நேரத்தில் இஸ்லாமிய பெருமக்களுக்கு பல சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதெல்லாம் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்திருக்கிறது. அந்தப் பணியை தி.மு.க. என்றைக்கும் தொடரும் என்று தெரிவித்துக்கொள்ளும் இந்த நேரத்தில், ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை பக்ரீத் பெருநாளில் ஏழை, எளியோரின் இன்னல் தீர மனமுவந்து வழங்கி மகிழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- கேரளத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதில்கூட இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஈகைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பக்ரீத் திருநாளை கொண்டாடாமல் அதற்கான செலவுக்காக வைத்திருந்த தொகையை கேரளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கி பக்ரீத் திருநாள் வலியுறுத்தும் தத்துவங்களுக்கு வலிமை சேர்த்துள்ளனர். இத்தகைய சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை என்றும் நீடிக்க வேண்டும். நல்ல மனம்கொண்ட மக்களுக்கு எல்லா நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும், சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும். இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:- மதநல்லிணக்கம்-ஒற்றுமை காப்போம். சிறுபான்மை மக்களின் நலன் காத்திட செயல்படுவோம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த்:- இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டும் என இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன். மனித உறவுகள் உன்னதம் பெற்றிட அன்பை விதைப்போம். பல ஆண்டுகாலமாக நான் தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத் திருநாளை கொண்டாடி வருகிறேன். அதேபோல், இந்த ஆண்டும் பக்ரீத்தை கொண்டாட உள்ளேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- தியாகத்தை பறைசாற்றும் ஒப்பற்ற திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய திருநாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு என்றும் அரணாக திகழும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இஸ்லாமிய மார்க்கத்தின் உயர்ந்த போதனைகளை என்றும் போற்றிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- உலகெங்கும் இஸ்லாமியர்கள் நினைவுகூர்ந்திடும் ஈகைத் திருநாளான பக்ரீத் பெருநாளில் இஸ்லாமிய சமூகத்தினர் யாவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:- தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் இந்த புனித பக்ரீத் பண்டிகை தினத்தில் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்வோம். தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கும் பக்ரீத் திருநாளை சிறப்பாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர், தியாகராயநகர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அரிமா சம்சுகனி, அகில இந்திய மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஏ.கே.தாஜூதீன் உள்ளிட்டோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.