ஆசிய ஆக்கி: 26 கோல்கள் போட்டு ஹாங்காங்கை பந்தாடியது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஆக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் லீக்கில் இந்தோனேஷியாவை 17-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்தது. இந்த நிலையில் இந்திய அணி 2-வது லீக்கில் மற்றொரு சிறிய அணியான ஹாங்காங்கை எதிர்கொண்டது. 2-வது நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கிய இந்திய வீரர்கள் இடைவிடாது கோல் மழை பொழிந்தனர். செய்வதறியாது திகைத்து நின்ற ஹாங்காங் வீரர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். முடிவில் இந்திய அணி 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை துவம்சம் செய்தது. ஆக்கி வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1932-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா 24-1 என்ற கணக்கில் வென்றதே சிறப்பான வெற்றியாக இருந்தது. அந்த 86 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் மாற்று ஆட்டக்காரர்கள் உள்பட மொத்தம் 14 பேர் கோல் அடித்தனர். அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் சிங் 4 கோலும், லலித் உபத்யாய், ருபிந்தர்பால் சிங், ஆகாஷ்தீப்சிங் தலா 3 கோலும் அடித்தனர்.
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சோங் யுடிஸ் வாங்கை (ஹாங்காங்) விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 81 நிமிடங்களில் வெற்றியை தனதாக்கிய அங்கிதா ரெய்னாவுக்கு இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
இதே போல் ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி 6-3, 5-7 (10-1) என்ற செட் கணக்கில் சீனத்தைபேயின் செங் பெங்- சங் ஹூவை இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றதோடு பதக்கத்தையும் உறுதி செய்தது. கலப்பு இரட்டையரில் போபண்ணா, அங்கிதா ரெய்னா ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி கண்டது.ஒற்றையர் 3-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 6-3, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஜூராபெக் கரிமோவிடம் (உஸ்பெகிஸ்தான்) தோற்று வெளியேறினார். இரட்டையர் கால்இறுதியில் சுமித் நாகலுடன் இணைந்து ஆடிய ராம்குமார் அதிலும் தோல்வியை தழுவினார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் ஆர்டிஸ்டிக் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 138.050 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. கால் முட்டி வலி காரணமாக அணிகள் பிரிவில் இருந்து தீபா கர்மாகர் விலகியது குறிப்பிடத்தக்கது. இதில் சீனா தங்கப்பதக்கத்தை வென்றது.
மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்பிரீத்சிங் (87 கிலோ, கிரிகோ ரோமன் பிரிவு) 3-6 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரர் குஸ்ட்பயேவிடம் வீழ்ந்தார்.