Breaking News
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்று அசத்தல்

45 நாடுகள் இடையிலான 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவின் ஜகர்தா, பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 4-வது நாளான நேற்று இந்தியா துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடந்த தகுதி சுற்றில், இந்திய ‘இளம் புயல்‘ மானுபாகெர் 593 புள்ளிகளுடன் முதலிடமும், மற்றொரு இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் 580 புள்ளிகளுடன் 7-வது இடமும் பிடித்தனர். இவர்கள் உள்பட மொத்தம் 8 பேர் இறுதி சுற்றை எட்டினர்.

இறுதி சுற்றில், எதிர்பார்க்கப்பட்ட உலக மற்றும் காமன்வெல்த் சாம்பியனான 16 வயதான மானு பாகெர் ஆரம்ப கட்டத்திலேயே சொதப்பினார். அவர் 16 புள்ளிகளுடன் வெளியேற்றப்பட்டார். குறிப்பிட்ட ரவுண்டுகளுடன் ஒவ்வொரு வீராங்கனைகளாக பின்வாங்கிய நிலையில் கடைசியில் இந்தியாவின் ராஹி சர்னோபாத், தாய்லாந்தின் நபஸ்வான் யாங்பைபூன் ஆகியோர் இடையே மகுடம் சூடுவதில் நேரடி போட்டி நிலவியது. 10 ரவுண்ட் முடிவில் (ஒவ்வொரு ரவுண்டிலும் தலா 5 முறை சுட வேண்டும்) இருவரும் போட்டி சாதனையுடன் தலா 34 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ‘ஷூட்-ஆப்’ முறையில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இருவரும் முதல் 5 ஷாட்டுகளில் 4 புள்ளிகளை எடுத்தனர். இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்ட போது ராஹி சர்னோபாத் மூன்று முறை இலக்கை துல்லியமாக சுட்டார். ஆனால் அவரை விட யாங்பைபூன் ஒரு ஷாட்டில் பின்தங்கினார். முடிவில் ராஹி சர்னோபாத் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். யாங்பைபூனுக்கு வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் கிம் மின்ஜங்குக்கு (29 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் பிறந்தவரான 27 வயதான ராஹி சர்னோபாத், அந்த மாநிலத்தில் உதவி கலெக்டராக பணிபுகிறார். ஏற்கனவே உலக போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற அனுபவம் சர்னோபாத்துக்கு உண்டு.

ஆசிய விளையாட்டு வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இப்போது அவர் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

வெற்றிக்கனியை பறித்ததும் தனது பயிற்சியாளர் முங்பயார் டோர்ஜ்சுரெனை (ஜெர்மனியின் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை) கட்டித்தழுவிய ராஹி சர்னோபாத், அவர் இல்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ‘எங்கள் இடையிலான உறவு தாய்-மகள் போன்றது. அவருக்கும் கிட்டத்தட்ட எனது வயதில் மகள் இருக்கிறார். ஓராண்டாக நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்’ என்றார். நடப்பு ஆசிய தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 7-வது பதக்கம் இதுவாகும்.

தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் சான்டா பிரிவில் 4 இந்தியர்கள் அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தனர். ஆனால் அரைஇறுதியில் 4 இந்தியர்களும் பரிதாபமாக தோற்றுப்போனார்கள்.

நரேந்தர் கிரிவால் (65 கிலோ) 0-2 என்ற புள்ளி கணக்கில் போரோட் ஜபாரியிடமும் (ஈரான்), சூர்யா பானு பர்தாப் சிங் (60 கிலோ) 0-2 என்ற கணக்கில் இர்பான் அஹங்காரியனிடமும் (ஈரான்), சந்தோஷ்குமார் (56 கிலோ) 0-2 என்ற கணக்கில் ஜியாங்கிடமும் (வியட்னாம்), இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி (60 கிலோ) 0-1 என்ற கணக்கில் காய் யிங்கிடமும் (சீனா) தோல்வியை தழுவினர். இருப்பினும் அரைஇறுதி வரை முன்னேறியதன் மூலம் நரேந்தர், சூர்யா பானு பர்தாப், சந்தோஷ்குமார், ரோஷிபினா தேவி ஆகிய 4 இந்தியர்களுக்கும் வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.