Breaking News
‘பிரபாகரன் கொல்லப்பட்டபோது நானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை’ ராகுல்காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். ஹம்பர்க் நகரில் உள்ள புசிரியஸ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு நிகழ்வில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனது பாட்டி, தந்தை ஆகியோரை பயங்கரவாதத்துக்கு பறிகொடுத்து இருக்கிறேன். இந்த வன்முறையை வெல்வதற்கும், அதை கடந்து வருவதற்கும் ஒரே வழி, மன்னிப்பு மட்டுமே. வன்முறைக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதை பலவீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மன்னிப்புதான் வலிமையானது.

எனது தந்தை 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டார். எனது தந்தையின் சாவுக்கு காரணமானவரும் சில ஆண்டுகளுக்குப்பின் கொல்லப்பட்டார். உடனே எனது சகோதரிக்கு தொலைபேசியில் அழைத்து, ‘நம் தந்தையின் சாவுக்கு காரணமாக இருந்தவர் கொல்லப்பட்டு விட்டார். ஆனாலும் என் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. என்னுடைய இதயம் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறது’ என்றேன்.

அதற்கு பிரியங்காவும், ‘சரியாக சொன்னாய், எனக்கும் மகிழ்ச்சி ஏற்படவில்லை’ என்றுதான் கூறினார். இவ்வாறு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை.

அதற்கு காரணம், பிரபாகரனின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னை வைத்து பார்த்தேன். எனது தந்தையை இழந்தபோது நான் கதறி கண்ணீர் விட்டது போன்றுதான் அந்த குழந்தைகளும் கதறும் என்று உணர்ந்தேன். வன்முறையை எதிர்த்து போரிட அகிம்சையால் மட்டுமே முடியும்.

என்னை பற்றி பிரதமர் மோடி வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் நான் அவரிடம் அன்பை மட்டுமே காட்டுகிறேன்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நான் அவரை கட்டிப்பிடித்ததை எனது கட்சியை சேர்ந்த சிலர்கூட விரும்பவில்லை. ஆனால் வெறுப்புக்கு பதிலாக வெறுப்பையே காட்டுவது முட்டாள்தனமானது. எந்த பிரச்சினைக்கும் இது தீர்வாகாது.

வேலையில்லா திண்டாட்டத்தை மிகப்பெரும் பிரச்சினையாக பார்க்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். இந்த பிரச்சினையை முதலில் உணர்ந்து கொண்டால்தான் அதற்கான தீர்வுகளை காண முடியும்.

தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களை வளர்ச்சி திட்டங்களில் இருந்து பா.ஜனதா அரசு புறக்கணித்து வருகிறது. இது மிகப்பெரும் ஆபத்தில் முடியும். 21-ம் நூற்றாண்டில் மக்களுக்கான பார்வையை மறுப்பது, அவர்களை ஒதுக்குவது என்பது விபரீதத்தை ஏற்படுத்தி விடும்.

உலகின் எந்த பகுதியிலும் பெருவாரியான மக்களை வளர்ச்சித்திட்டங்களில் இருந்து ஒதுக்கிய போது, கிளர்ச்சிக்குழுக்களே உருவாகி இருக்கின்றன. இதற்கு உதாரணம்தான் ஐ.எஸ். அமைப்பு.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பெண்கள் வாழ இந்தியா தகுதியற்ற நாடு என்னும் கருத்தை ஏற்கமாட்டேன். பெண்களை, ஆண்கள் சமமாக பார்க்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.