கேரளாவில் மீண்டும் 27 – 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. அத்துடன் மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 5 லடசத்தும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் வெள்ளம், சேறு, சகதியால் மாசுபடிந்த வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரளாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், 28ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 24 மணி நேர இடைவெளியில் 7 முதல் 11 செ.மீ அளவுக்கான மழை பெய்ய வாய்ப்புள்ள கன மழையாக இது இருக்கும் என்றும், இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம் என்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது, எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.