Breaking News
பிரபலங்கள் நிறைந்திருக்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’

இந்திய திரையுலகில் உள்ள பல மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மூத்த கதாநாயகர்கள், பெரும்பாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களின் நடன அசைவுகளை குறைத்துக் கொண்டு, பாடல் காட்சிகளில் நடந்தே சமாளிக்கும் யுக்தியை கையாளுவது வாடிக்கை. ஆனால் 60 வயதைத் தாண்டிய நிலையிலும், 30 வயது இளம் கதாநாயகர்களுக்கு இணையாக வளைந்து நெளிந்து துள்ளல் நடனம் போடும் ஒரே நடிகர் சிரஞ்சீவியாகத்தான் இருக்க முடியும். நடிப்பின் மூலமாக மட்டுமின்றி, நடனத்தின் வாயிலாகவும் தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் நபர் அவர்.

‘புனதிராலு’ என்ற படத்தின் மூலம் நடிகராக ஒப்பந்தமானவர் சிரஞ்சீவி. ஆனால் அந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், 1978-ல் வெளியான ‘பிரானம் காரீடு’ என்ற படம் தான் அவரது அறிமுகப் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் துணை நடிகராக நடித்தபிறகே அவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

2007-ம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் ‘சங்கர் தாதா ஜிந்தாபாத்’ என்ற படம் வெளியானது. இது இந்தியில் சஞ்சய் தத் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான ‘லகே ரஹோ முன்னாபாய்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்திற்குப் பிறகு அரசியலில் கவனம் செலுத்திய அவர், படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சிரஞ்சீவி, மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

படங்களில் நடித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், தனது ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க ஒரு நல்ல கதையை அவர் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் தான் ‘கைதி எண்:150’. இது தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் ரீமேக் ஆகும். 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சிரஞ்சீவியின் ரசிகர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டியது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், சிரஞ்சீவியின் 150-வது படமாகவும் அமைந்தது.

ரீ-எண்ட்ரி அதிரிபுதிரியாக அமைந்த காரணத்தால், அடுத்த படத்தில் உடனடியாக நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டினார். 150 படங்களாக கமர்ஷியல் கதாபாத்திரங்களிலேயே காலத்தைக் கடத்தி விட்டதால், அடுத்த படம் ஒரு வரலாற்று கதாபாத்திரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் சிரஞ்சீவி உறுதியாக இருந்தார். அப்படி கிடைத்ததுதான் ஆந்திராவில், 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதை.

தற்போதைய கர்னூல் மாவட்டத்தில் குண்டூ நதிக்கரையில் அமைந்திருந்த இடம்தான் உய்யலவாடா. இந்தப் பகுதியில் நரசிம்மரெட்டியின் தாத்தா ஜெயராமி ரெட்டியும், தந்தை பெத்தமல்ல ரெட்டியும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். அவர்களின் வாரிசாக வந்த நரசிம்ம ரெட்டி, கிடலூரு என்ற இடத்தில் இருந்த ஆங்கிலேயர் களின் முகாமை தாக்கி, அவர்களை ஓட ஓட விரட்டினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.