Breaking News
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,100 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு முதலீட்டு மண்டலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி வட்டங்களில் 2,100 ஏக்கர் பரப்பளவில், டிட்கோ மற்றும் ஜி.எம்.ஆர் இன்ப்ராசெட்ரக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ஜி.எம்.ஆர். கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலத்தை அமைக்க உள்ளன. இதற்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தின் வடமாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அடிக்கல் நாட்டப்பட்ட ஜிஎம்ஆர் கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலத்தில், உலகத்தரமான சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் மற்றும் மின் வசதி, இணையதள வசதி போன்ற வசதிகள் அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படும்.

இதன்மூலம் தமிழகத்துக்கு முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் ஈர்க்கப்படும். இம்மண்டலத்திற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை சுமார் 2,420 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டம் முழுமையாக முடிவுறும்போது (7-8 ஆண்டுகளில்), 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதோடு, சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வழி வகுக்கும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இந்தக் கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.

இந்த கழகத்துக்கு 20 முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) மற்றும் 17 முதுநிலை அலுவலர் (நிதி) ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.