கேரளாவுக்கு ஒரு லட்சம் அம்மா குடிநீர் பாட்டில்கள் லாரிகளில் அமைச்சர்கள் அனுப்பி வைத்தனர்
கேரளாவில் பெய்த கனமழையால் அங்குள்ள மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பல இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார்.
இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் ஏற்றப்பட்ட 11 லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தனர். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் அனைத்து மக்களும் இயல்பு நிலைக்கு திரும்ப என்னென்ன உதவிகள் வேண்டுமோ அவை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் ரூ.4 கோடி செலவில் 42 வகையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து பல பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்து உள்ளோம்.
தற்போது கேரள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளநீரில் இருந்து சுத்தமான குடிநீர் தயாரிக்கக்கூடிய எந்திரத்தையும் சிட்கோவில் இருந்து அனுப்பி வைத்து உள்ளனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணியால் செய்யப்பட்ட பைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.