Breaking News
‘வெள்ளிப்பதக்கத்தை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ தமிழக வீரர் தருண் பேட்டி

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயியான இவரது தந்தை அய்யாசாமி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அவரது தாயார் பூங்கொடி தான் தருணையும், அவரது தங்கை சத்யாவையும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் வளர்த்து வருவதுடன், விளையாட்டில் இருவருக்கும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

பதக்கம் வென்ற பிறகு தருண் அளித்த பேட்டியில், ‘எனக்கு 8 வயதாக இருக்கையில் தந்தை இறந்து விட்டார். தாயார் எனக்கான நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். தற்போதும் அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். தற்போது எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.