Breaking News
குராஷ் விளையாட்டில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

ஆசிய விளையாட்டில் அறிமுகப்போட்டியாக இடம் பெற்றுள்ள குராஷில் இந்தியாவுக்கு நேற்று 2 பதக்கம் கிடைத்தது. குராஷ் போட்டி, மல்யுத்தம் வகையைச் சேர்ந்தது. மல்யுத்தத்தில் கைகளால் பிடித்து எதிராளியை மடக்குவார்கள். இதில் கைகளுடன் கால்களையும் பயன்படுத்தி எதிராளியை கீழே தூக்கி போட்டு வீழ்த்த வேண்டும்.

இந்த போட்டியில், 52 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹரா முதல் சுற்று, கால்இறுதி, அரைஇறுதி ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை வசப்படுத்தி இறுதி ஆட்டத்தில் குல்னோர் சுலைய்மனோவாவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். இதில் தடுமாறிய பிங்கி 0–10 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

முன்னதாக இதே பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மலபிரபா எல்லப்பா ஜாதவ் 0–10 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சுலைய்மனோவாவிடம் தோல்வி கண்டார். ஆனாலும் அரைஇறுதி வரை முன்னேறியதன் மூலம் மலபிரபாவுக்கு அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. கர்நாடகாவைச் சேர்ந்த மலபிரபா, விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

19 வயதான பிங்கி டெல்லி அருகே உள்ள நெப் சராவி கிராமத்தில் வசிக்கிறார். 3 மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த பிங்கி கூறுகையில், ‘எனது பயிற்சிக்காக எனது கிராமத்தை சேர்ந்த மக்கள் ரூ.1¾ லட்சம் பணம் திரட்டி பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எனக்கு எல்லா வகையிலும் ஊக்கமளித்தனர். அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டுள்ளேன்’ என்று கண்ணீல் மல்க கூறினார்.

இந்திய குராஷ் விளையாட்டு சம்மேளனத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை. தற்போது இந்திய வீராங்கனைகள் சாதித்து இருப்பதன் மூலம் விரைவில் அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் உறுதி அளித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.