போலீஸார் நெருங்குவதை அறிந்து சேலம் ரயில் கொள்ளையர்கள் வேறு இடத்துக்கு தப்பி ஓட்டம்: சிபிசிஐடி விசாரணையில் மீண்டும் தொய்வு
போலீஸார் நெருங்குவதை ஊடக செய்திகள் மூலம் அறிந்த சேலம் ரயில் கொள்ளையர்கள் வேறு இடங்களுக்கு தப்பிவிட்டனர் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் விசாரணையில் மீண்டும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி ரயிலின் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டன. சென்னைக்கு வரும் வழியிலேயே ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை நடந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சில கொள்ளையர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. பல கட்ட விசாரணைக்குப் பிறகு, கொள்ளையர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர்.
இஸ்ரோ புகைப்படங்கள்
கொள்ளை நடந்தபோது சேலம் முதல் சென்னை வரையிலான 350 கி.மீ. தொலைவுக்கு செயற்கைக் கோளில் பதிவான ரயிலின் புகைப்படங்கள் இஸ்ரோ உதவியுடன் பெறப்பட்டன. இஸ்ரோவில் இருந்து வந்த சுமார் 20 புகைப்படங்களைக் கொண்டு, ரயில் எங்கு வரும்போது மேற் கூரையில் துளையிடப்பட்டது என்ற தகவல்களையும் திரட்டினர்.
4 தனிப்படைகள்
சுமார் 1 லட்சம் செல்போன் எண் களை ஆய்வு செய்து குற்றவாளிக ளை அடையாளம் கண்டுபிடித்த னர். மத்திய பிரதேச போலீஸா ருடன் இணைந்து கொள்ளையர் களை பிடிப்பதற்கான பணி களில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இதற்காக 20 பேர் கொண்ட 4 தனிப்படைகளும் தயாராக இருந்தன.
தப்பிய கொள்ளையர்கள்
இந்நிலையில், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த தகவல்கள் கடந்த 2 நாட்க ளாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகின.
இதுகுறித்து தெரிந்து கொண்ட கொள்ளையர் கள், போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்து, கடைசி யாக தாங்கள் பயன்படுத்திவந்த செல்போன்களை ‘சுவிட்ச் ஆஃப்’ செய்துவிட்டு, வேறு இடங்களுக்கு தப்பிவிட்டனர்.
இதனால் போலீஸாரால் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை. இதன் காரணமாக, கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள் ளனர்.